Wednesday, March 24, 2010

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம்

| | 0 comments

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம்.

நீண்ட,நெடிய சமூக மற்றும் அரசியல் வரலாற்றினையுடைய இந்தியாவில் "சட்டம்" மற்றும் "நீதி" குறித்து புராண, இதிகாச நூல்கள் மூலமும், பல்வேறு புனைவுக்கதைகளின் வாயிலாகவும் பலதரப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்ததையும், தவறான நீதி வழங்கியதற்காக தனது ஆட்சியையும், உயிரையும் துறந்த மன்னனின் கதைகளையும், தாய்ப்பசுவின் கண்ணீரை துடைக்க தவறு செய்த தன் மகனையே தேரில் இடறி தண்டித்த அரசனின் "நீதி பரிபாலன"த்தையும் படித்துள்ளோம்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நவீன சட்டமுறைகளும் ஆங்கிலேயர்களின் லாபத்திற்காகவும், இந்தியர்களை அடிமை படுத்துவதற்க்காகவுமே பயன்படுத்த பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மக்களாட்சி முறையில் தேர்ந்துடுக்கபட்ட எந்தவொரு அரசும் அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படையாக கொண்டு நாட்டை நீதியின் வழியிலேயே ஆள்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. டாக்டர். அம்பேத்கர் தலைமையில் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில், ஆள்பவர்களின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையான பல சிறப்பு அதிகாரங்களை கொண்டு பல்வேறு மட்டங்களில் செயல்படும் இந்திய "நீதித்துறை" சாமானிய மக்களும் சமமான நீதி பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. தனிமனிதர்கள் தங்களது உரிமைகளை பெறுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் நீதியின் வாயிலாக அரசாங்கத்தையும் எதிர்க்கும் அளவிற்கு 'கடமை'யுடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் சுமார் மூன்று கோடியே பதினோரு லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் பற்றாக்குறை, ஒருங்கிணைக்கப்படாத நீதிமன்றங்கள், குழப்பமான குற்றப்பிரிவுகள் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க கீழ்க்கண்ட வழிகளையும் பரிந்துரைத்துள்ளது.
1.நீதிபதிகளை அதிகப்படுத்துதல்,காலியாகவுள்ள நீதிமன்ற பணியிடங்களை நிரப்புதல்.
2.சமரசம் போன்ற பிறவழிகளை ஊக்கப்படுத்துதல்.
3.பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழிருக்கும் வழக்குகளை குறைந்த பொதுப்பிரிவுகளின் கீழ் கொண்டுவருதல்.
4.நீதித்துறையை கணினிமயமாக்குதல்.
5.நடைமுறை படுத்துவதற்கு எளிதான புதிய சட்டங்களை இயற்றுதல்.
குற்றங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் அரசு குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கென இருக்கும் வழிகளை கடுமையாக்காமல் மெத்தனமாகவே செயல்படுகிறது.

நாடெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய "ருச்சிகா" (தற்)கொலை வழக்கில் இருபது ஆண்டுகளாகியும் சரியான தீர்ப்பு வழங்கப்படாததும், காவல்துறையின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர் தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறான வழிகளில் பயன்படுத்தி குற்றத்தை மறைத்து வந்ததும், வழக்கறிஞரான அவரது மனைவி வழக்கை திசைதிருப்ப தவறான சாட்சியங்களை தயார் செய்ததும் நீதித்துறையில் மலிந்துவிட்ட ஊழலுக்கு மோசமான உதாரணமாகும்.

குற்றங்கள் சரியான முறையில் நிரூபிக்கப்பட்டு அதற்கென வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இல்லாததும், குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் தங்கள் தண்டனைகளிலிருந்து தப்பி சுதந்திரமாக உலவுவதும் மென்மேலும் குற்றங்கள் அதிகமாவதற்கே வழி செய்கிறது. மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் தவறான வழிகளில் பயன்படுத்த படுகிறது என்ற காரணங்களுக்காக அவற்றை தவிர்க்கும் நீதித்துறையும், மனித உரிமை ஆர்வலர்களும்,, குற்றங்களால் பாதிக்கப்படுவதும் மனித உயிர்களே என்பதால் நீதித்துறையில் லஞ்ச,ஊழல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக போராட முன்வரவேண்டும்.

"குற்றங்களுக்கு எதிரான வலிமைமிக்க ஆயுதம் சட்டம்" என்பதை சாமானிய மக்களும் நம்பி சட்டத்தின் வாயிலாகவே தங்கள் உரிமைகளை பெறும்நிலை வரும்போதுதான் சட்டத்தின் வழியில் அமைக்கப்பட்ட "ஜனநாயக"மும் நிலைக்கும்.




நன்றி : திருச்சொல்
leer más...
 
 

Diseñado por: Compartidísimo
Con imágenes de: Scrappingmar©

 
Ir Arriba