Wednesday, March 24, 2010

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம்

| | 0 comments

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம்.

நீண்ட,நெடிய சமூக மற்றும் அரசியல் வரலாற்றினையுடைய இந்தியாவில் "சட்டம்" மற்றும் "நீதி" குறித்து புராண, இதிகாச நூல்கள் மூலமும், பல்வேறு புனைவுக்கதைகளின் வாயிலாகவும் பலதரப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்ததையும், தவறான நீதி வழங்கியதற்காக தனது ஆட்சியையும், உயிரையும் துறந்த மன்னனின் கதைகளையும், தாய்ப்பசுவின் கண்ணீரை துடைக்க தவறு செய்த தன் மகனையே தேரில் இடறி தண்டித்த அரசனின் "நீதி பரிபாலன"த்தையும் படித்துள்ளோம்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நவீன சட்டமுறைகளும் ஆங்கிலேயர்களின் லாபத்திற்காகவும், இந்தியர்களை அடிமை படுத்துவதற்க்காகவுமே பயன்படுத்த பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மக்களாட்சி முறையில் தேர்ந்துடுக்கபட்ட எந்தவொரு அரசும் அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படையாக கொண்டு நாட்டை நீதியின் வழியிலேயே ஆள்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. டாக்டர். அம்பேத்கர் தலைமையில் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில், ஆள்பவர்களின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையான பல சிறப்பு அதிகாரங்களை கொண்டு பல்வேறு மட்டங்களில் செயல்படும் இந்திய "நீதித்துறை" சாமானிய மக்களும் சமமான நீதி பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. தனிமனிதர்கள் தங்களது உரிமைகளை பெறுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் நீதியின் வாயிலாக அரசாங்கத்தையும் எதிர்க்கும் அளவிற்கு 'கடமை'யுடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் சுமார் மூன்று கோடியே பதினோரு லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் பற்றாக்குறை, ஒருங்கிணைக்கப்படாத நீதிமன்றங்கள், குழப்பமான குற்றப்பிரிவுகள் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க கீழ்க்கண்ட வழிகளையும் பரிந்துரைத்துள்ளது.
1.நீதிபதிகளை அதிகப்படுத்துதல்,காலியாகவுள்ள நீதிமன்ற பணியிடங்களை நிரப்புதல்.
2.சமரசம் போன்ற பிறவழிகளை ஊக்கப்படுத்துதல்.
3.பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழிருக்கும் வழக்குகளை குறைந்த பொதுப்பிரிவுகளின் கீழ் கொண்டுவருதல்.
4.நீதித்துறையை கணினிமயமாக்குதல்.
5.நடைமுறை படுத்துவதற்கு எளிதான புதிய சட்டங்களை இயற்றுதல்.
குற்றங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் அரசு குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கென இருக்கும் வழிகளை கடுமையாக்காமல் மெத்தனமாகவே செயல்படுகிறது.

நாடெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய "ருச்சிகா" (தற்)கொலை வழக்கில் இருபது ஆண்டுகளாகியும் சரியான தீர்ப்பு வழங்கப்படாததும், காவல்துறையின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர் தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறான வழிகளில் பயன்படுத்தி குற்றத்தை மறைத்து வந்ததும், வழக்கறிஞரான அவரது மனைவி வழக்கை திசைதிருப்ப தவறான சாட்சியங்களை தயார் செய்ததும் நீதித்துறையில் மலிந்துவிட்ட ஊழலுக்கு மோசமான உதாரணமாகும்.

குற்றங்கள் சரியான முறையில் நிரூபிக்கப்பட்டு அதற்கென வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இல்லாததும், குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் தங்கள் தண்டனைகளிலிருந்து தப்பி சுதந்திரமாக உலவுவதும் மென்மேலும் குற்றங்கள் அதிகமாவதற்கே வழி செய்கிறது. மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் தவறான வழிகளில் பயன்படுத்த படுகிறது என்ற காரணங்களுக்காக அவற்றை தவிர்க்கும் நீதித்துறையும், மனித உரிமை ஆர்வலர்களும்,, குற்றங்களால் பாதிக்கப்படுவதும் மனித உயிர்களே என்பதால் நீதித்துறையில் லஞ்ச,ஊழல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக போராட முன்வரவேண்டும்.

"குற்றங்களுக்கு எதிரான வலிமைமிக்க ஆயுதம் சட்டம்" என்பதை சாமானிய மக்களும் நம்பி சட்டத்தின் வாயிலாகவே தங்கள் உரிமைகளை பெறும்நிலை வரும்போதுதான் சட்டத்தின் வழியில் அமைக்கப்பட்ட "ஜனநாயக"மும் நிலைக்கும்.




நன்றி : திருச்சொல்
leer más...

Tuesday, February 9, 2010

அக்மார்க் முத்திரை

| | 0 comments

அக்மார்க் முத்திரை பற்றி அறிந்து கொள்ள ஆவல் உள்ளவர்களுக்கு ,







அக்மார்க் முத்திரை, அக்மார்க் பொருட்கள் என்று கேள்விப் பட்டிருப்போமல்லவா.... அதன் பணி என்ன என்ன ?, எதற்கெல்லாம் தரச்சான்றிதழ் வழங்குகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இங்கு
அக்மார்க் முத்திரை, கிளிக்கவும்


நன்றி
leer más...

Saturday, January 9, 2010

இந்திய வாரிசுரிமைச் சட்டங்கள்

| | 1 comments

ஒரு இந்துப்பெண் இறந்துவிட்டால், அவளது சொத்து அவளது குழந்தைகளுக்கும் (ஆண், பெண்) கணவருக்கும் சேருகிறது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னரே, அவரது மகன் உயிர் நீத்திருந்தால், பேரக்குழந்தைகள் அனைவருக்கும் சேர்த்து ஒரு சமபங்கு ஒதுக்கப்படுகிறது.




முஸ்லீம்களது சொத்து வாரிசுரிமைச் சட்டங்கள் சிக்கலானவை. ஷியாக்களுக்கும், சன்னிக்களுக்கும் வாரிசுரிமைகள் வேறுபடுகிறன. ஆனால் கீழ்கண்ட மூன்று பொதுவான விதிகள் அனைவருக்கும் பொருந்தும்:-

1. இறுதிச் சடங்குகளுக்குச் செலவினங்கள், கடன்கள் ஆகியவற்றை அடைத்த பின்னர், மீதியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்குத்தான், உயில் எழுதி வைக்கமுடியும்.
2. ஒரு ஆனுக்கு, பெண்ணைவிட இரண்டு மடங்கு சொத்துரிமை உண்டு.
3. ஒரு பரம்ரையில் வந்த வாரிசுதாரர்கள் என்கிறபோது, நெருக்கமான மகளை எடுத்துக் கொண்டு, பேரனை விட்டுவிடலாம். மகன் பேரனைவிட நெருக்கமானவர் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த வாரிசுரிமைச் சட்டம் இந்திய கிறித்துவர்களிடையே சொத்துரிமை பகிர்விற்கு வழிவகை செய்கிறது. சிறப்புத் திருமணச் சட்டபடித் திருமணம் செய்து கொண்டவர்கள், இந்தியப் பிரஜா உரிமை பெற்ற ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், யூதர்கள் ஆகியோருக்கும் வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும்.

கணவனை இழந்த பெண்ணுக்கு, அவரது கணவன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கிறது. மீதமுள்ள சொத்துகள், இறந்தவருடைய வாரிசுதாரர்களுக்குச் சேருகிறது. வாரிசுகள் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தைத்தான் பிரித்துக் கொள்ள வேண்டும். விதவை மனைவி மட்டுமே இருந்தால், அவருக்கு கணவனது சொத்தில் பாதி சேரும். மீதி, கணவனது தந்தைக்கும் சகோதரிகளுக்கும் சேரவேண்டும். ஒரு பெண்ணின் சொத்தும், இதே அடிப்படையில்தான் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பார்சி இனமக்களிடையில் ஒர் ஆணின் சொத்து, விதவை மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண் குழந்தைக்கும், விதவைக்கும் ஒரு பெண் குழந்தைக்குரிய பங்கில், இரண்டு மடங்கு பிரித்துத் தரப்படுகிறது. தந்தைக்கு பேரனின் பாதிப்பங்கும், தாய்க்கு பேத்தியின் பாதிபங்கும் வழங்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் சொத்து, கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

நிதி அல்லது இன்சூரன்ஸ் பாலிசியில் (நியமனதாரர்) நியமிக்கப்படும் பிரதிநிதி என்று குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கே சொத்துரிமை மாற்றப்படுவதில்லை. பிரதிநிதி (நியமனதாரர்) என்று குறிப்பிடுவது, அந்தப் பிரதிநிதி அறங்காவலர் சொத்துக்குப் பொறுப்பானவர் என்ற அடிப்படையில்தான் நியமனதாரர் பெயர் சில பத்திரங்களில் நாமினி பெயர் என்று குறிப்பிடப்படுகிறது.

கணவனது சொத்துக்கள் பிரிக்கப்படும்போது, மனைவியின் சொந்தச் சொத்துக்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. பெண்ணிற்கே அவலது சொந்தச் சொத்தில் முழு உரிமை உண்டு. பெண்ணின் சொத்துக்கள் என்று சொல்லும் போது, அவள் சம்பாதித்தது, தனிப்பட்ட சொத்துக்கள், அவள் பெற்ற வெகுமதிகள் (திருமணத்தின் போது) அதில் அடங்கும்.

உயில்

ஒருவர் இறப்பதற்கு முன்னர், உயில் எழுதப்படுகிறது. சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்க்கள் வழக்குகள் சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயில் எழுதி வைக்கப்படுகிறது. உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, அறக்கட்டளைகள் உட்பட எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம்.

இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டபடி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.

ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் - அவர்கள் கணவன்/ மனைவி அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’,)
leer más...

திருமணப்பதிவு ஏன்? எப்படி?

| | 0 comments

திருமணப்பதிவு ஏன்? எப்படி?




திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.

இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.

எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது. மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.

இந்து திருமணத்தை பதிவு செய்தல்.





இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம். மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம்.

மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.



கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது. உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.

அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.

இஸ்லாமியத் திருமணங்கள்



இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.

இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.

- சுந்தரராஜன் ( sundararajan@lawyer.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

(நன்றி: மக்கள் சட்டம்,)
leer más...

Thursday, January 7, 2010

தகவல்களை எனக்கு தர !

| | 0 comments

சட்டம் ஒரு பார்வை





சட்டம் ஒரு இருட்டறை என்பதெல்லாம் அந்தக்காலம் ,இந்தக்காலத்திற்கு சட்டம் வெளிச்சத்தில் இருந்தே ஆகவேண்டும்

நம் நாட்டின் சட்டங்கள் பற்றி நம்மில் இன்னும் நிறைய பேர் தவறாகவும் , தெரியாமலும் உள்ளனர், ஆதலால் எனக்குக்கிடைக்கும் சட்டம் தொடர்பான அனைத்து செய்திகளையும் , கருத்துக்களையும் , தொகுத்து வழங்க உள்ளேன் , இங்கு உள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையே ,

சட்டம் அறிவது அவசியமா என்று நம்மில் பலர் கேக்கலாம் , அவசியமே அதன் முழு

பயனையும் பெற சட்டம் அறிந்து கொள்ளவே வேண்டும் .


இங்கு ஏதாவது(சட்டம்) தவறாக எழுதி இருப்பின் சுட்டிக்காட்டுக , மற்றும் தங்கள் கருத்துக்களையும் தங்களுக்கு தெரிந்த சட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாயின் தயவு செய்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

என்னை தொடர்பு கொள்ள , thangamari2007@gmail.com


வாழ்க ஜனநாயகம் !!
leer más...
 
 

Diseñado por: Compartidísimo
Con imágenes de: Scrappingmar©

 
Ir Arriba